Translate

சனி, 8 மார்ச், 2014

கவிதைகள்

என்ன சொல்லுது....


ஓங்குமலை வீசும் தென்றல் என்ன கூறுது - அது
ஓடிவந்தும் எந்தன்காதில் என்ன சொன்னது
ஏங்கும் வாழ்வில் என்றும்கொள் சுதந்திரத்தினை - இன்று
ஏன்மறந்து காண்பதென்று என்னைக் கேட்குது
தேங்கிவீழ்ந்து ஓடும்பாறை தொட்டுச் சிந்திடும் - அந்த
தூயவெள்ளை நீரின் ஓடை என்ன சொல்லுது
நீங்கியுன்நி லம்மறந்த வாழ்வைச் சாடுது - இங்கு
நீயில்லாமல் தேசமா என்றென்னை வையுது

பூங்கொடிக்குள் பூத்தலர்ந்த  பொன்னெழில்மின்னும் - அந்த
போகும் காற்றில் ஆடும்பூக்கள் என்னசொன்னது
தாங்கிநீ மனம் பொறுத்த தன்மை ஏனது - உன்றன்
தாயெனும் நற்தேச மீட்பைத் தேடு என்குது
மாங்கனிந்த சோலை யெங்கும் ஆடும் இன்பழம் - அது
மாறிஉள்ளம் தேய்ததேனோ  என்றுகேட்குது
மூங்கில் கூட்டம் மோதிதீ பிடித்த போதிலும் - உன்றன்
மூச்சுக்காற்றில் வெம்மையில்லை என்று நோகுது
செங்கனலாய்  அந்திவானம் மாறிய தென்ன - அது
சீறி நெஞ்சம் கோபமிட்ட ஆதவன் தன்னால்
கங்கைவெள்ளம் போலமண்ணில் காணுது செந்நீர் - இதைக்
கண்டும் தூக்கம் கொள்ளுவாயோ மெய்பட கண்ணீர்
அங்கமெங்கும் நொந்துவாடி ஆகுது துன்பம் - அது
ஆணவத்தின் வேகம் கொண்டு நின்றவர் இன்னல்
எங்கள் மேனி இங்கவர்க்கு இச்சைகொள் நாசம் -செய்து
இம்சைதன்னில் இன்பம் காணும் இத்தனை பாவம்
தங்க வண்ணத் தேரிலேற்றி எங்களின் அன்னை - தேசம்
தன்னை இன்ப வானிலோட செய்திடுமண்ணில்
பொங்கியோடும் பொய்கையூடு பொன்னெழில் மின்ன - இந்தப்
பூமலர்ந்து கொள்ளவேசு தந்திரம் என்ற
சங்குமூதும் சத்தமொன்று கேட்பதுமென்ன - உந்தன்
சங்கநூலைப் போட்டுவிட்டு கைகொடு வெல்ல
தொங்கியாடும் ஊஞ்சல் வாழ்வை வென்றிடுநாளை - நல்ல
தூய மண்ணின் இருள் மறைந்து ஒளிபெறும் வேளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக