தேவாரம் :
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
திருவாசகம் :
கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறி மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே