Translate

சனி, 13 டிசம்பர், 2014

பஞ்ச புராணம்1

திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம் ஓதுவதாகும். அவற்றை ஓதும் வரிசைக் க்ரமம் பின்வருமாறு:-
1. தேவாரம்
2. திருவாசகம்
3. திருவிசைப்பா
4. திருப்பல்லாண்டு
5. திருப்புராணம்
6. திருப்புகழ் 
7. வாழ்த்து 

                                                                தேவாரம் :  

தாயினும் நல்ல தலைவர் என்றடியார் 
தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலா 
மாண்பினர் காண்பலவேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி 
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த 
கோணமாமலை அமர்ந்தாரே.

திருவாசகம் : 
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
 யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
 எங்கெழுந் தருளுவது நீயே

 திருவிசைப்பா :
கற்றவர் விழுங்குங் கற்பக கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னை கண்டுகண்டுள்ளம்
குளிர என் கண் குளிர்தனவே

திருப்பல்லாண்டு : 
பாலுக்கு பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாக
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே

திருப்புராணம் : 
தண்ணளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூமழை சொரிந்தார்
அண்ணலவன் கண்ணெதிரே அணிவீதி மழைவிடைமேல்
விண்ணவர்கள் தொழநின்றான் வீதி விடங்கப்பெருமான்.

திருப்புகழ் :
உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
   ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி 
இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே 
தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே 
அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

வாழ்த்து : 
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக